மக்களவை தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் இரண்டும் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதனிடையே தேர்தல் நடைபெறும் அதே தினத்தில் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கவும் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது மதுரையில் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்துவோம் என்றும் ஒத்திவைக்க முடியாது எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சித்திரை திருவிழா நடைபெறுவதால் தேர்தலை தள்ளிவைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இது குறித்து நாளை மறுநாள் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, விசாரணையை அன்றைய தினமே ஒத்திவைத்தது.
Discussion about this post