கடலூர் துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ள தமிழக அரசுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் தூண்டில் வளைவை அமைத்துத் தரவும் கோரியுள்ளனர்.
200 ஆண்டுகள் பழமையான கடலூர் இயற்கை துறைமுகம் வழியாக தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்த துறைமுகத்தின் முகத்துவாரத்தில் உருவாகும் மணல்மேடுகளால் இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பல மீனவர்கள் உயிரிழந்து வந்தனர். இந்நிலையில், இந்தப்பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து ஆழப்படுத்த கடந்த 20 ஆண்டுகளாக கடலூர் மீனவர்கள் கோரி வந்தனர்.
இந்நிலையில், உப்பனாற்றில் 15 அடி ஆழம் மற்றும் 50 மீட்டர் அகலத்தில் முகத்துவாரம் வரை ஆயிரத்து 500 மீட்டர் தூரம்வரை ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மீனவர்களின் நலன்கருதி இந்தப்பணியை மேற்கொண்டுள்ள தமிழக அரசுக்கு மாவட்ட மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
வாக்குறுதிகளை கூறி மீனவ சமுதாய மக்களின் வாக்குகளை பெறுவதிலேயே ஆர்வம் காட்டிய முந்தைய திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றும் அதிமுக அரசே மீனவர்களின் நலன்கருதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அருள்மொழித்தேவன் முயற்சியில் 3.5 கோடி ரூபாய் செலவில் துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள கடலூர் மீனவர்கள் மீண்டும் முகத்துவாரப் பகுதியில் மணல் சேராமல் தடுக்க தூண்டில் வளைவு அமைத்துத் தரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றனர்.
Discussion about this post