ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திருமணமான பெண்ணுக்கு முகநூலில் வேறு ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பை துண்டிக்க அவரது கணவர் அந்த பெண்ணுக்கு மொட்டையடித்து வீட்டில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் ஆலாங்காட்டு தோட்டம் வாவிகடை பகுதியை விவசாயி தட்சிணாமூர்த்திக்கும் லோகநாயகிக்கும் திருமணாமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களுக்கு 16 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். லோகநாயகி கடந்த சில ஆண்டுகளாக தனது செல்போனில் முகநூல் மூலமாக ஈரோட்டை சேர்ந்த சண்முகையா என்கிற சதீஷ் உடன் தொடர்பு ஏற்பட்டு பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு நீண்டுள்ளது. ஒரு கட்டத்தில் முகநூல் தொடர்பு தனது கணவர் தட்சிணா மூர்த்திக்கும் தம்பி தமிழ்வாணனுக்கும் தெரிய வந்ததை தொடர்ந்து லோகநாயகியை வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். கடந்த மாதம் லோகநாயகிக்கு மொட்டை அடித்தும் கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது நண்பர் ஒருவரின் மூலமாக ஈரோடு பெண்கள் ஒருங்கிணைந்த சேவை அமைப்புக்கு தொடர்பு கொண்ட லோகநாயகி, தன்னை கணவரும் தனது தம்பி தமிழ்வாணனும் வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்துவதாக புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, லோகநாயகி மீட்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லும் போது, தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை வழிமறித்த தட்சிணாமூர்த்தி, லோகநாயகியை அழைத்து செல்ல முற்பட்டுள்ளார். மேலும், பெண் அதிகாரிகளை அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் லோகநாயகியை வெளியே விடாமல் காரில் இழுத்து பிடிக்கும் பரபரப்பு காட்சிகளை தங்களது செல் போனில் பதிவு செய்து கொண்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லோகநாயகியை மீட்டு பெண் அதிகாரிகளுடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லோகநாயகியின் கணவரிடம் விசாரித்த போது தனது மனைவிக்கு மன நிலை சரியாக இல்லை என்றும் சிகிச்சைக்காக மொட்டை அடித்துள்ளதாகவும் கூறினார். ஆனால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லோகநாயகி தனது கணவருக்கும் தனக்கும் கருத்துவேறுபாடு உள்ளதாகவும், தனது தம்பி தமிழ்வாணன் தான் தனது குடும்ப பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக கூறினார். தனது கணவரும் தமிழ்வாணனின் பேச்சை மட்டுமே கேட்பதால் தங்களது குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் உள்ளதாகவும், தன்னை கட்டாயப்படுத்தி மொட்டையடித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post