தென் கொரியாவில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பன்றிகளால், ரத்த ஆறு உருவாகி இணையத்தில் பரவலாக பேசபட்டது, என்னதான் நடந்தது?
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் சமீபகாலமாகத் தென் கொரியாவில் வேகமாகப் பரவிவருகிறது. இந்த நோய் பன்றிகளை மிகவும் எளிதாகத் தாக்கி, பிற விலங்குகளுக்கும் பரவும் தன்மைகொண்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு இதுவரை எந்த சிகிச்சையும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விலங்குகள் இறுதியில் இறப்பை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனால் மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
தென்கொரியாவில் தற்போது பன்றிகளுக்கு மட்டுமே இந்தக் காய்ச்சல் பரவியுள்ளதால், அவற்றிடமிருந்து பிற விலங்குகளை காப்பாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது அந் நாட்டு அரசு. இதனால் நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் பன்றிகள் இதுவரை கொல்லபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோயால் வட கொரியாவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக, வட கொரியா – தென் கொரியா எல்லையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 47 ஆயிரம் பன்றிகள் சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் கொல்லப்பட்டு, தென் கொரிய எல்லையில் புதைக்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு கனமழை பெய்து வருவதால், பன்றிகள் புதைக்கப்பட்ட இடம் சிதைந்து, அவற்றின் ரத்தம் மழைநீரில் கலந்துள்ளது.
மொத்த மழை நீரும் பன்றிகள் புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகில் ஓடும் இம்ஜின் என்ற கிளை ஆற்றில் கலந்துள்ளதால், மொத்த நதியும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. பிற விலங்களுக்கு நோய் பரவக் கூடாது என்பதற்காக, ஆயிரக்கணக்கான பன்றிகள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அதன் ரத்தம் ஆற்றில் கலந்து, அதனால் இன்னும் பல உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், பன்றிகள் கொல்லப்படுவதற்கு முன்னதாகவே, நோய் பரவாமல் இருக்க, அவற்றுக்கு மருந்துகள் செலுத்தப்பட்டதாகவும், இந்த நீரால் விலங்குகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட பன்றிகளின் உடலிலிருந்து மேலும் ரத்தம் வெளியேறாமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Discussion about this post