திரையிசைப் பாடல்களில் முன்னோடி கவிஞராக வலம் வந்த பாடலாசிரியர் மருதகாசியின் 32-வது நினைவு தினம் இன்று.. பாமர மொழியின் படிநிலைகளைப் பாடல்களுக்குள் செதுக்கிய பாடலாசிரியரின் வாழ்க்கைப் பாதையை வருடிச் செல்கிறது இந்த செய்தித் தொகுப்பு….
தமிழ் திரையுலகத்தின் 2வது தலைமுறையின் ஈடற்ற பாடலாசிரியராக மலர்ந்த மருதகாசி, அரியலூரில் தோன்றிய அருந்தமிழ் வித்தாவார். சிறு வயது முதலே கவிதைகள் எழுதும் ஆற்றல் பெற்றிருந்த மருதகாசி, நாடகத்தின் மூலம் பொதுமக்களின் நாடித் துடிப்பைப் படம்பிடிக்கும் பாடலாசிரியராக மின்னியவர் ஆவார்.
மூக்குத்தி அணிந்த முத்தமிழ்க் கவிஞராக வலம் வந்த மருதகாசி, மெட்டுக்கு பாட்டு கட்டுவதில் தனக்கெனத் தனித்துவமான நடையைக் கொண்டு, பல வெற்றிப் பாடல்களை திரையில் வழங்கிய திறமை மிக்கவர் ஆவார். இசையமைப்பாளர் ஜி.ராமநாதன், பாடகர் டி.ஆர்.மகாலிங்கம் என மருதகாசியின் திரைப்பாடல்களுக்கு ஒளி கொடுத்து, ஜொலித்தவர்கள் ஏராளம் எனலாம். கம்பதாசன், கவி.கா.மு.ஷெரீப், உடுமலை நாராயணகவி என்று சமகாலத்தில் போட்டிகள் இருந்தாலும், தமக்குள் உள்ள பொதுவுடைமைக் கருத்தென்னும் புதையலால், புதுநடை நடந்தவர் மருதகாசி.
அப்போது பலர் மெட்டுக்குப் பாட்டும், பாட்டுக்கு மெட்டும் என்று எழுதிவந்த காலத்தில், காட்சிகளுக்கு உடனுக்குடன் பல்லவி சொல்லும் கவிதை ஆற்றலைப் பெற்றிருந்தார் மருதகாசி. பொதுமக்களின் யதார்த்த வார்த்தைகளை இசைக்குள் கோத்து, இதயங்களில் பாட்டு வரிகளை பதியச் செய்த பெருமை இவருக்கு உண்டு. குறிப்பாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மருதகாசி எழுதியுள்ள பாடல்கள், மக்கள் நினைவை விட்டு அகலாத நிலைத்தன்மையைக் கொண்டவை.
மருதகாசி, சுமார் 250 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 4 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிக் குவித்துள்ளார். ‘தை பொறந்தால் வழி பொறக்கும் தங்கம், சீவி முடிச்சு சிங்காரிச்சு’ போன்ற பாடல்கள் மூலம், வானொலிகளோடு வாழ்ந்த தலைமுறையின் காதுகளுக்குள் கவிதைத்தேன் பாய்ச்சிய மருதகாசி, தமிழ்ப் பாடல்களில் கவிதை உள்ளவரை மாருதமாய் வீசுகிறார்… இன்னிசையாய்ப் பேசுகிறார்…
– நியூஸ் ஜெ செய்திகளுக்காக விவேக்பாரதி.
Discussion about this post