டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், கூட்டத்தின் கடைசி நாளில், தீர்மானங்கள் சட்ட முன்வடிவாக நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக விழுப்புரத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதே போன்று, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கும் சட்ட முன்வடிவும், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்த தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி திருத்த தீர்மானமும், சட்ட மசோதாவாக நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதம் நீட்டிப்பதற்கான சட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேறியது. மேலும், 2013ம் ஆண்டு இயற்றப்பட்ட அண்ணாமலைப் பல்கலைகழக சட்டம் மற்றும் 1987ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழக சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்து, சட்டமுன் வடிவாக நிறைவேற்றம் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2 ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் நிறைவடைவதாகவும், கூட்டத்தொடர், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும், சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
Discussion about this post