ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு காடையாம்பட்டி தாலுக்கா அலுவலகம் அருகே ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அதே பகுதியில் மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் மகப்பேறு பெண்களுக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அம்மா சஞ்சீவி பெட்டகம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றிய அதிமுக சார்பில் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் எம்.ஜி.ஆரின் திருஉருவச்சிலைக்கும், ஜெயலலிதாவின் திருஉருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதிமுகவினர் கோயில்களில் அபிஷேகம் செய்தும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.*
கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜெயலலிதாவின் திருஉருவச் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், ஆறுகுட்டி, அம்மன் அர்ஜுனன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவள்ளூர் தேரடி அருகில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தியதோடு, அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அம்மா பேரவை சார்பில், ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியைதை செலுத்தி பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அதிமுகவினர் பேரணியாக சென்று மரியாதை செலுத்தினர். மன்னார்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து காமராஜ் சிலை வழியாக பேரணியாக சென்று பெரியார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தஞ்சையில் மேள, தாளத்துடன் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்ற அதிமுகவினர் ரயில் நிலையம் அருகே உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை மாவட்டம், தென்காசி பகுதியில் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடினர்.
Discussion about this post