வெலிங்டனில் இன்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியில், இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் மட்டும் தொடர்ந்து தடுமாறி வருகிறது. இதுவரை, 9 டி20 ஆட்டங்களை நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாடியுள்ளது. இதில் 7 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post