ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது. டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 50 ரன்களைக் குவித்தார்.
127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 1 ரன்னிலும், ஆரோன் பின்ச் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். எனினும் அடுத்து வந்த மேக்ஸ்வேல், தொடக்க வீரரான டி ஆர்க்கி சார்ட்டுடன் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். மேக்ஸ்வெல் 56 ரன்னிலும், டி ஆர்க்கி சார்ட் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்த போட்டி கடைசி ஓவர் வரை பரபரப்பாக நடைபெற்றது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உமேஷ் யாதவ் பந்து வீசினார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி 127 ரன்களை எட்டிப்பிடித்தது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னணியில் உள்ளது. இந்தியாவின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Discussion about this post