உடல்நலக் குறைவால் உயிரிழந்த கோவாவின் முதலமைச்சரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான மனோகர் பாரிக்கர் உடலுக்கு அரசு மரியாதையுடன் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கோவா, மும்பை, டெல்லி மற்றும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். கணைய புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலை மோசமடைந்த நிலையில், நேற்று மாலை 6.40 மணியளவில் கோவாவில் உள்ள மருத்துவமனையில் அவர் காலமானார்.
பாரிக்கர் மறைவையடுத்து, இன்று தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கோவாவில் 7 நாட்கள் துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதனிடையே, மனோகர் பாரிக்கர் உடல் கோவாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பஞ்சிம் பகுதியில் உள்ள கலா அகாடமியில் மாலை 5 மணியளவில் அவரது இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், கோவாவின் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post