கடந்த ஆண்டு இதே நாளில் தமிழகத்தில் தனது ருத்ரதாண்டவத்தை நிகழ்த்தியது கஜா புயல். அப்போது தமிழக அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளும், மின்சாரத்துறையினர் மேற்கொண்ட இரவு பகல் பாராத பணிகளும் தமிழக மக்களால் என்றும் மறக்க முடியாதவை. அது பற்றிய சிறப்பு தொகுப்பு
வங்க கடலில் கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி உருவான காற்றழுத்த்தாழ்வு நிலை மண்டலமாக மாறி புயலாக உருவெடுத்தது வானிலை ஆய்வு மையத்தால் கஜா என பெயரிடப்பட்ட அந்த புயல் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில்16 ஆம் தேதி கரையை கடந்து, மக்களை நிலை குலையச் செய்தது.
புயல் நிலைகொண்ட போதே, பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில், பாதுகாப்புக் காரணங்களுக்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கஜா புயலால் 12 மாவட்டங்களில் உள்ள 32 ஆயிரத்து 111 கிலோ மீட்டர் நீள மின் பாதைகள் கடும் சேதத்தை சந்தித்தன. ஆயிரத்து 655 மின்மாற்றிகளும், 3 லட்சத்து 31 ஆயிரத்து 772 மின் கம்பங்களும் புயலால் உருக்குலைந்தன.
புயல் கடந்த பின்பு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப புயலின் சேதங்கள் பெரிய தடைகளாக இருந்தன. மரங்கள், வீடுகள் இவற்றோடு மின்கம்பங்களும் விழுந்து கிடந்ததால் மக்கள் மின்சாரம் எப்போது கிடைக்குமோ என்று அச்சம் கொள்ள ஆரம்பித்தனர். அந்நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழக அமைச்சர்கள் கஜா புயல் பாதித்த இடங்களில் களம் இறங்கினர். அவர்கள் மக்களின் மத்தியில் இருந்த அச்சத்தைப் போக்கியதோடு, எதிர்க் கட்சிகள் உள்ளிட்டவர்களின் விஷமப் பொய்ப் பிரசாரங்களையும் முறியடித்தனர்.
அதே நேரம், தமிழக மின்சாரவாரியம் தனது புயல்வேக நடவடிக்கைகளைத் தொடங்கியது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் விநியோகத்தை சீரமைப்பதற்கு போர்க்கால அடிப்படையில் 24 மணி நேரமும் மின் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, வெளி மாவட்ட மின் பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையிலான மின் பணியாளர்களும் கூட களமிறக்கப்பட்டனர். அமைச்சர்களின் அயராத பணிகளும், மின்துறைப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து, மக்களுக்காகப் பாடுபட்ட காட்சிகளும் மக்களை நெகிழ்ச்சிக்கு ஆளாக்கின. இப்படியாகப் பழுது நீக்கப் பணிகள் முடிக்கப்பட்ட இடங்களுக்கு மின் விநியோகமும்
விரைவாக வழங்கப்பட்டது. இதனால் வரலாறு காணாத பேரிடரைச் சந்தித்த இடங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு உள்ளாகவே இயல்புநிலை திரும்பியது. மீண்டும் அங்கெல்லாம் 24 மணிநேர தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது.
கஜா புயல் பாதித்த இடங்களின் தற்காலிக சீரமைப்பிற்காக மட்டும் 2 ஆயிரத்து 438 கோடி கணக்கீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு மின் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கே வந்து, சீரமைப்புப் பணிகளில் பங்கேற்றதும், மின்துறை ஊழியர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றியதும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும் மனவலிமையையும் தந்தன.
கஜா புயல் கடந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில், மக்கள் ஒரு பேரிடரைச் சந்திக்கும் போது அவர்களுக்குத் துணையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும், அமைச்சர்களும், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு எந்திரங்களும் எப்படியெல்லாம் செயல்படுவார்கள், அவர்கள் மக்கள் மீது எவ்வளவு பரிவு காட்டுவார்கள் என்பதற்குச் சான்றாக நிற்கின்றன, கஜா புயலின் போது தமிழக மின் துறை மேற்கொண்ட அயராத பணிகள்.
Discussion about this post