5 லட்சம் கோடி டாலர் மதிப்புக்கு பொருளாதார வளர்ச்சி என்கிற கனவு நனவாகும் : மோடி

ஐந்து லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்கிற கனவு விரைவில் நனவாகும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

3 நாள் அரசுமுறைப் பயணமாகத் தாய்லாந்துக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பாங்காக்கில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது இந்தியாவுக்கு இது நல்ல காலம் எனத் தெரிவித்தார். இந்தியாவில் எளிதாகத் தொழில் நடத்துவது, எளிதாக வாழ்க்கை நடத்துவது, நேரடி வெளிநாட்டு முதலீடு, பசுமைப் பரப்பு, காப்புரிமை, உற்பத்தித் திறன், உட்கட்டமைப்பு ஆகியவை அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார். அதே நேரத்தில் வரிகள், வரி விகிதங்கள், கோப்புகள் தேக்கம், ஊழல், குடும்ப ஆட்சி ஆகியவை குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்குப் பொருளாதார வளர்ச்சி என்கிற கனவை நோக்கிப் பயணித்து வருவதாகவும் இந்தக் கனவு விரைவில் நனவாகும் எனவும் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது 2 லட்சம் கோடி டாலராக இருந்த உள்நாட்டு மொத்த உற்பத்தி, ஐந்தே ஆண்டுகளில் 3 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். பாங்காக்கில் இன்று நடைபெற உள்ள தென்கிழக்காசிய நாடுகள் உச்சிமாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். கிழக்காசிய நாடுகள் கூட்டத்திலும், மண்டலப் பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாட்டிலும் மோடி பங்கேற்க உள்ளார்.

Exit mobile version