நாள்தோறும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சிக்குள் நமது முன்னோர்களின் வாழ்க்கையை பறைசாற்றும் ஒரு சிறிய கிராமம். இதுகுறித்து ஒரு சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் அமைந்திருக்கிறது தக்ஷிண சித்ரா மியூசியம். தக்ஷிண சித்திரம் என்ற பெயர் வரகாரணம், தக்ஷிணம், சித்ரம் என்ற இரு வடமொழி வார்த்தைகளின் கூட்டே தக்ஷிண சித்ராவாக மாற்றம் பெற்றது. தக்ஷிணம் என்றால் தெற்கு என்று பொருள், சித்ரம் என்பதற்கு காட்சி என்பது பொருள், தமிழில் தென்னாட்டு காட்சி என பொருள்படும் வகையில் இந்த மியூசியத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தென்னாட்டு மக்களின் கலாச்சாரத்தை விளக்குவதால் இந்த காரணப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இங்கு தென்னிந்திய கலாச்சாரம், நுண்கலை, திராவிடக் கட்டிடக்கலை, பழந்தமிழர் நாகரிகம், தமிழக நாட்டுப்புறக் கலைகள், ஓவியம், தென்னிந்தியாவை ஆண்ட மன்னர்களின் வரலாறு ஆகியவை உள்ளன.
முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பதை, கிராமத்தின் வாசனையே அறியாத நகர்ப்புற குழந்தைகளுக்கும், வரும் தலைமுறையினருக்கும் சொல்ல வேண்டும் என்று வடிவமைக்கப்பட்டது தான் தட்சிண சித்ரா மியூசியம். 10 ஏக்கர் பரப்பளவில் தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற 17 பாரம்பரிய நிஜமான வீடுகள் இங்கு காணப்படுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், காரைக்குடி பகுதியில் உள்ள செட்டிநாடு வீட்டை அப்படியே தத்ரூபமாக கட்டியுள்ளார்கள்.
முன்னோர்கள் உபயோகித்த பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. நெசவாளர் வீடு, குயவர் வீடு மேலும், அய்யனார் சிலை, கிராமத்து குதிரை சிலை, டெரகோட்டா சிற்பங்கள், தப்பாட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பராம்பரிய நடனங்கள் ஆகியவை தங்களது பெருமையை பறைசாற்றும்படி வடிவமைக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சுழலை கருத்தில் கொண்டு பனை ஓலை பொருட்கள், கண்ணாடியில் சிற்பம் செய்வது, களிமண்ணில் பானைகள் செய்வது எப்படி என்று சொல்வது மட்டுமில்லாமல், விருப்பம் உள்ளவர்களுக்கு கற்றும் கொடுக்கிறார்கள். இங்கு ஒவிய கண்காட்சி மற்றும் புகைப்படக்கண்காட்சி நடத்தப்படுகிறது. பராம்பரியம் பற்றி சொல்லும் நூலகமும் இங்கு இருக்கிறது.
Discussion about this post