கிரடிட் கார்டுகள், சமூக வலைத்தளங்கள், மின்னணு தகவல் தொடர்பு என்று இன்று உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் பல தொழில்நுட்பங்கள், சிறிய எண்ணங்களில் இருந்து தோன்றியவைதான். இந்த வரிசையில் எதிர்காலத்தை மாற்ற உள்ளதாகக் கருதப்படும் ஒரு தொழில்நுட்பம் குறித்த சிறப்பு தொகுப்பு.
இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு வீரரின் சிறிய எண்ணம் ஒன்று இப்போது ஒரு பெரிய பொருளாதார தொழில்நுட்ப நிறுவனமாக மாறி உள்ளது. கர்வ் என்று பெயரிடப்பட்டு உள்ள அந்த நிறுவனத்திற்கு 31 ஐரோப்பிய நாடுகளில் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது 1700 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக உள்ள இந்த நிறுவனம், இன்னும் 10 ஆண்டுகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ளதாக மாறும் என்று கணிக்கப்படுகிறது. இவ்வளவு பெரிய நிறுவனத்தின் பின்னாக உள்ள அந்த எண்ணம் என்ன?.
இஸ்ரேலிய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரரான சச்சார் பியாலிக் என்பவர், ஐரோப்பியர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு வங்கிகளில் கணக்குகளை வைத்துக் கொண்டு, அந்த ஒவ்வொரு வங்கியின் கிரடிட், டெபிட் கார்டுகளை எப்போதும் சுமந்து கொண்டு அலைவதைப் பார்க்கிறார். அனைத்து வங்கிகளுக்கும் ஒரே கிரடிட் கார்டு இருந்தால் எப்படி இருக்கும்? – என்று யோசிக்கிறார். அந்த யோசனையில் இருந்து பிறந்ததுதான் இந்த கர்வ் நிறுவனம். இதனை 2015ல் தனது 34ஆவது வயதில் சச்சார் தொடங்கினார்.
அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தக் கூடிய கிரெடிட் கார்டை விற்கும் கர்வ் நிறுவனத்திற்கு என சொந்தமாக ஒரு வங்கி இல்லை. அதனிடம் உள்ளது எல்லாம் ஒரு கைபேசி செயலியும், ஒரு கார்டும் மட்டும்தான். இந்தக் கைபேசி செயலியை தனது ஆண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்யும் பயனர், அதில் தனது அனைத்து கிரடிட், டெபிட் கார்டு விவரங்களையும் பதிவிட வேண்டும். பின்னர் செயலியில் உள்ள விவரங்களைக் கொண்டு கர்வ் கார்டு இயங்கும். இதனால் அனைத்து வங்கிகளின் கிரடிட், டெபிட் கார்டுகளையும் ஒருவர் சுமந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
மிக எளிமையான, ஆனால் பலனளிக்கக் கூடிய இந்த கர்வ் கார்டு இப்போது ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாகி வருகிரது. விரைவில் ஆசிய நாடுகளிலும் இது கால்பதிக்க உள்ளது. ‘ஆன்லைன் வர்த்தகத்திற்கு அமேசான் எப்படியோ, அது போல வங்கிப் பரிவர்த்தனைக்கு கர்வ் – என்ற நிலையை எட்டுவோம்’ – என்பதே சச்சார் பியாலிக்கின் இலக்காக உள்ளது.
எந்த வங்கிப் பின்னணியோ, தொழில்நுட்பப் பின்னணியோ இல்லாத முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், தனது எண்ணத்தை மட்டுமே நம்பி, தனது 35வது வயதில் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றைத் தொடங்கி வர்த்தகத்தில் சாதித்து வருவது ஐரோப்பிய சந்தைகளில்
ஆச்சர்யத்தோடு கவனிக்கப்பட்டு வருகின்றது.
Discussion about this post