பெண் குழந்தைகளை பாதுகாக்க புரட்சித் தலைவி ஜெயலலிதா கொண்டுவந்த தொட்டில் குழந்தை திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் பெண் சிசு கொலையை ஒழிக்கும் விதமாக 1992ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நடைமுறைப்படுத்தினார்.
2001ம் ஆண்டில் இத்திட்டத்தை மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டதால், ஆயிரம் குழந்தைகளுக்கு 942 குழந்தைகள் என இருந்த பாலின விகிதம் 2011ம் ஆண்டில் 946ஆக அதிகரித்தது.
இந்நிலையில், பெண் குழந்தைகளை பாதுகாக்க புரட்சித் தலைவி ஜெயலலிதா கொண்டுவந்த தொட்டில் குழந்தை திட்டம் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படுமா? என்று மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து பேசிய அவர், பெண் சிசு கொலையை ஒழிக்க அறிமுகப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் ஏராளமான பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டதோடு அவர்கள் கல்வி கற்க உதவியது என்றும் குறிப்பிட்டார்.
எனவே, பெண் சிசுவை பாதுகாக்க தொட்டில் குழந்தை திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்றும் தம்பிதுரை கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, பெண் குழந்தைகளை பாதுகாக்க மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று தெரிவித்தார்.
அதிமுக எம்பி தம்பிதுரையின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
Discussion about this post