தமிழகத்தில் 5 ஆயிரத்து 698 கோடி மதிப்பிலான பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கை சந்தித்த தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் 17 லட்சம் மக்கள் பயன்பெறும் குடிநீர் திட்டத்திற்கு 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 452 கிராமங்கள் பயன்பெறும் வகையில் ஆயிரத்து 800 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் குடிநீர் வினியோகத்தை சீரமைத்தல் மற்றும் புத்துயிர் அளிக்கும் திட்டங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க கேட்டுள்ளார். கோடைகால குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த 100 கோடியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தியுள்ளார். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மேம்படுத்துவதற்காக 50 கோடி ரூபாயை ஒதுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் வறட்சி நிவாரண நிதியாக 448 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும். நகர்புற மற்றும் பெரிய பஞ்சாயத்துகளின் குடிநீர் தேவைக்காக 300 கோடி ரூபாயை ஒதுகீடு செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post