2006ல் வெளியானது வசந்தபாலன் இயக்கத்தில் ‘வெயில்’ திரைப்படம். அதன் பாடலை கேட்டால் நம் மனது அறிமுக இசையமைப்பாளரின் இசை என நம்ப மறுக்கும். அதில் வந்த “உருகுதே மருகுதே”, “வெயிலோடு விளையாடி” பாடல் அவ்வளவு பேமஸ். ஆம் அப்படிதான் அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ்குமார்.
தமிழ் சினிமா குறிப்பிட்ட இசையின் கீழே பயணித்து கொண்டிருந்தது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் என்பதை தாண்டி ஹிட் பாடலான ஜென்டில்மேனின் “சிக்குபுக்கு ரயிலு”பாடலில் மூலம் 90களிலேயே அறிமுகம் என்று. நிஜமாகவே அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் போல வேறு யாருக்கும் எளிதில் கிடைத்ததில்லை. அடுத்ததாக அஜித்தின் “கிரீடம்”, ரஜினியின் “குசேலன்”, தனுஷின் “பொல்லாதவன்” என முன்னணி ஹீரோக்களின் படங்களில் கமிட்டானார் ஜி.வி.
ஜி.விக்கு மிகப்பெரிய அங்கீகாரம் “அங்காடி தெரு” படத்தில் கிடைத்தது. இதன் பாடல்களுக்கு என்றென்றைக்கும் பேவரைட் லிட்ஸ்டில் இடமுண்டு. இதன்மூலம் செல்வராகவனின் “ஆயிரத்தில் ஒருவன்” படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. பீரியட் படம் என்பதால் தேடி தேடி இசையமைத்து குறிப்பாக பின்னணி இசையில் பிரமிக்க வைத்தார். 2010ல் ஜிவி இரு முக்கிய படங்களுக்கு இசையமைத்தார். ஒன்று “மதராசப்பட்டினம்”, மற்றொன்று “ஆடுகளம்”. இரண்டிலுமே அட்டகாசமான பாடல்களை கொடுத்தார்.
மெலடி பாடல்களில் ஜிவி செய்த மாயங்கள் ஏராளம். குறிப்பாக அவர் மனைவியும், பாடகியுமான சைந்தவியுடன் இணைந்து பாடிய “மயக்கம் என்ன” படத்தின் ‘பிறைதேடும் இரவிலே’ பாடல் அப்படியொரு உயிரோட்டம் நிறைந்ததாக இருக்கும். “தலைவா”வின் ‘யார் இந்த சாலையோரம்’, “ராஜாராணி”யின் ‘இமையே இமையே’ என அவரின் இசையின் பாடல்கள் தனிரகம்.
முன்னணி இயக்குநர்களான பாலா, பாரதிராஜா போன்றோரும் ஜிவியை தங்கள் படங்களில் பயன்படுத்திக்கொண்டனர். இதில் வேடிக்கையான விசயம் ஜிவி ஹீரோவான பிறகு பாலாவே தன் படத்தில் நடிக்க வைத்தார்.
ஹீரோவான பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் ஏராளம். டார்லிங் தொடங்கி கடைசியாக வெளிவந்த வாட்ச்மேன் வரை தமிழின் மோஸ்ட் வாண்டட் ஹீரோவாக இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.இதில் அவர் யார் படங்களிளெல்லாம் இசையமைத்தாரோ அவர்களில் இயக்குநர் பாலா, விஜய் போன்றோர் ஜிவியையே தங்கள் பட ஹீரோவாக தேர்வு செய்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இவரின் “சர்வ தாள மயம்” படத்திற்கு இசையமைத்துள்ளார் என்றால் அவருக்கு உண்டான அதிர்ஷ்டத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.
ஹீரோவாகிக்கொண்டே இசையமைத்தாலும் முன்னால் இருந்த ஒரு எனெர்ஜி இப்போது அவருக்கு இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்படுகிறது. மேலும் அவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெறவில்லை என்கிற போது மீண்டும் இசையில் மட்டுமே கவனம் செலுத்த அவரது ரசிகர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர். இதற்கு நடுவில் சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். தற்போது “சிவப்பு மஞ்சள் பச்சை ’’ படத்தில் நடித்துள்ளார்.என்னதான் தன் திறமையை இசையமைப்பாளர், நடிகர் என இரு பரிணாமங்களில் நிரூபித்தாலும் நாங்கள் மிஸ் பண்ணுவது என்னவோ ஜி.வியின் இசையை தான்…..!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஜி.வி.பி…
Discussion about this post