கேட்கும் திறன் இல்லாமல் பிறந்த பச்சிளம் குழந்தையொன்று, தாயின் குரலை முதன்முறையாகக் கேட்டு மகிழும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இங்கிலாந்து நாட்டின் ஹரோகேட் பகுதியைச் சேர்ந்த பால் அடிசன் – லூசி தம்பதியினருக்கு 4 மாதங்களுக்கு முன்பு ஜியார்ஜினா என்ற பெண் குழந்தை பிறந்தது. பிறக்கும் போதே கேட்கும் திறன் இல்லாமல் பிறந்த அந்தக் குழந்தைக்கு, மருத்துவர்களின் ஆலோசனைகளுக்குப் பின்னர் சமீபத்தில் செவித்திறன் கருவி பொருத்தப்பட்டது.
அதுவரை எந்த ஓசையையும் கேட்காமல் இருந்த ஜியார்ஜினாவுக்கு செவித்திறன் கருவி பொருத்தப்பட்டு, அது இயக்கப்பட்டபோது குழந்தையின் தாய் லூசி குழந்தையிடம் பேசினார். முதன்முறையாகத் தனது தாயின் குரலைக் கேட்ட ஜியார்ஜினாவின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. ஜியார்ஜினாவும் தாயிடம் பதிலுக்குப் பேச முயற்சித்தாள்.
மனதை நெகிழவைக்கும் இந்தக் காட்சிகளை, குழந்தையின் தந்தை தனது கேமராவில் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்தார், அந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Discussion about this post