ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயதுக் குழந்தை சுர்ஜித்தைப் பாதுகாப்பாக மீட்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில், 25ஆம் தேதி மாலை முதல் தற்போது வரை நடந்தது என்ன …? செய்தித் தொகுப்பு
வெள்ளிக்கிழமை மாலை 5 .45 மணியளவில், தனது வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுர்ஜித், எதிர்பாராத விதமாக, பயன்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்…
முதலில் 10 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருந்த குழந்தை சுர்ஜித், மெல்ல மெல்ல 30 அடிக்குக் கீழ் இறங்கிவிட்டான்.
இதனையடுத்து, மணிகண்டனின் நவீனக் கருவியுடன் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் முயற்சி நடைபெற்றது. அப்போது, குழந்தையின் கைகளில் கயிறு மாட்டப்பட்டு, மெல்ல மெல்லக் குழந்தையை மேல் நோக்கி இழுக்கும் பணி நடைபெற்றது.
அப்போது எதிர்பாராத விதமாகக் குழந்தையின் கைகளில் இருந்த கயிறு நழுவியதால், சிறுவன் மீண்டும் 30 அடியில் இருந்து சுமார் 68 அடி ஆழத்திற்குச் சென்றான். இதனால் சிறுவனை மீட்கும் பணி, மேலும் துரிதப்படுத்தப்பட்டது, சிறுவன் மீது மணல் விழுந்ததால் 68 அடியில் இருந்து 85 அடி ஆழத்திற்கு இறங்கிவிட்டான்.
சிறுவன் சுவாசத்திற்காக ஆக்சிஜன் குழாய் உட்செலுத்தப்பட்டுள்ளது, மேலும் சிறுவன் கீழே செல்லாத வகையில் ஏர் லாக் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. ONGC நிறுவனத்தின் ரிக் கருவி மூலம் துளையிடும் பணி நடைபெற்றது. அதைவிட 3 மடங்கு அதிகத் திறன் கொண்ட ரிக் எந்திரம் ராமநாதபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
அதி நவீன ரிக் இயந்திரமானது 3 மடங்கு வேகத்தில் துளையிடும் திறன் கொண்டதால், அந்த இயந்திரம் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரம் மூலம் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே 90 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட உள்ளது. தோண்டி முடித்ததும் அந்தக் குழியில் மீட்புப் படை வீரர்கள் இறங்கிச் சென்று ஆழ்துளைக் கிணற்றுக்குப் பக்கவாட்டில் 2 மீட்டர் நீளத்துக்குப் பாறையைக் குடைந்து வழி ஏற்படுத்திக் குழந்தையை மீட்க உள்ளனர்.
பல கட்ட முயற்சிகள் தோல்வியடைந்தாலும் மனம் உடையாமல் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும், அதிகாரிகளுக்கும், தீயணைப்பு மற்றும் பேரிடர் வீரர்களுக்கும் துணை நின்று நம்பிக்கையூட்டுவோம்…
வீரர்களின் பெரும் முயற்சியால் மீண்டு வருவான் சுர்ஜீத் …
Discussion about this post