தேர்தலின்போது அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக என்றும், திமுக பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் 2ம் கட்ட பிரசாரத்தில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். திருவாரூர் மாவட்டம், கொராடச்சேரியில் திருவாரூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் ஜீவானந்தம் மற்றும் நாகப்பட்டினம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் தாழை சரவணன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி தேர்தலின் போது அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக என கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சியினரின் கூட்டணியில் அனைவருக்கும் பிரதமர் கனவு இருப்பதாக விமர்சித்தார். எனவே, அந்தக் கட்சிகளால் மத்தியில் நிலையான ஆட்சியை அமைக்க முடியாது என்றும், பிரதமர் மோடியால் மட்டுமே, சிறப்பான ஆட்சியை வழங்க முடியும் எனவும் கூறினார்.
இஸ்லாமிய மக்களுக்கு அரணாக இருக்கும் ஒரே கட்சி அதிமுக என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கூத்தாநல்லூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், மாநிலங்களவையில் முத்தலாக் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த கட்சி அதிமுக என்பதை சுட்டிக் காட்டினார்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் வாக்கு சேகரித்த முதலமைச்சருக்கு இஸ்லாமிய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர், பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர், தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக எந்தவொரு தீர்மானத்தை மத்தியில் கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்போம் என உறுதியளித்தார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட உதவியது அதிமுக அரசு தான் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்துக்கு அதிமுக அரசு துணை நிற்கும் என்றார்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தேர்தல் முடிந்தபிறகு 2ஆயிரம் ரூபாய் நிச்சயம் வழங்கப்படும் என்றும், அதை வழங்க விடாமல் தடுத்தது திமுக என்றும் முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டினார். திருவாரூர் வாழவாய்க்கல் ரவுண்டானா அருகே பேசிய அவர், தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசு என பெருமிதம் தெரிவித்தார்.
சட்ட மன்றத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொடுமைகள் இழைத்த திமுகவுக்கு, பெண்களின் பாதுகாப்பை பற்றி பேச தகுதியில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க அதிகளவில் போராடியது அதிமுக அரசு என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகையில் பிரசாரம் செய்த அவர், 60 ஆயிரம் கோடி திட்ட மதிப்பில் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை சாத்தியப்படுத்தினால், காவிரியில் சீரான நீர் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து வேளாங்கண்ணியில் பிரசாரம் செய்த முதலமைச்சர் அதிமுக அரசு மக்களுக்கான அரசு என்றும், கொள்கைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும் கூறினார். தேர்தல் முடிந்தபிறகு முன்பே அறிவித்தபடி 2ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
Discussion about this post