சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை பெற்று தரப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அஇஅதிமுக அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏழை அழுத கண்ணீர் – இறைவன் முன் நீதி கேட்கும், அது கூரிய வாளுக்கு சமம் என குறிப்பிட்டுள்ள அமைச்சர், தந்தை மகன் உயிரிழக்க காரணமானவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தருவது அரசின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு தமிழக அரசு உச்சபட்ச தண்டனையை நிச்சயம் பெற்றுத்தரும் என அவர் உறுதியளித்துள்ளார். இந்த வழக்கில் எந்தவித ஐயங்களுக்கும் இடம் தந்துவிடக்கூடாது என்னும் நோக்கத்தோடு, இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். அப்பாவி இருவரது இறப்பை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் திமுகவும், ஸ்டாலினும் திட்டமிட்டு சூழ்ச்சிகள் செய்கின்றனர் என்றும், அவரது குடும்ப தொலைக்காட்சிகளும், கூட்டணிக் கட்சி ஊடகங்களும் அரசின் மீது பழி போடும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதை உணர முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இச்சம்பவத்தை வழக்கம் போல் அரசியலாக்கி, முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது போன்று பின்னால் இருந்து எழுதித்தரப்படும் அவதூறுகளை, அதிகார பித்து பிடித்தவராக, அறிக்கைகளாக வெளியிடுகிறார் என குறிப்பிட்டுள்ளார். அன்று கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை எதிர்த்து போராட்டம் நடத்திய அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமாரை அடித்து கொலை செய்துவிட்டு, பெற்றவர்களை பிடித்து வந்து, தங்கள் பிள்ளையே இல்லை என்று சொல்ல வைத்த இவர்களை விட, பெற்றோரது உன்னதத்தை உணர்ந்தவர்கள் அஇஅதிமுகவினர் என தெரிவித்துள்ளார். பட்டப்பகலில் மதுரை உயர்நீதிமன்றம் எதிரில், பத்திரிக்கை ஊழியர்கள் மூவரை எரித்து படுகொலை செய்தது, தா.கிருட்டிணனை கொலை செய்தது, பெரம்பலூர் சாதிக் பாட்ஷா மரணம், உள்ளிட்ட திமுகவினரின் அராஜகங்களை அமைச்சர் சி.வி. சண்முகம் பட்டியலிட்டுள்ளார்.
ஸ்டாலினின் அனைத்து உள் விவகாரங்களையும் அறிந்த அண்ணாநகர் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டபோது, அருகில் இருந்த அண்ணாநகருக்கு செல்லாதவர்கள், தற்போது மட்டும், தன் மகனை இ-பாஸ் வாங்காமல் தொற்று காலத்தில் தூத்துக்குடி வரை அனுப்பி வைத்தது எதற்காக என்பதை மக்கள் அறிவார்கள் என தெரிவித்துள்ளார். அவதூறுகளால் மட்டுமே அதிகாரத்தை கைப்பற்றிவிடலாம் என கணக்கு போடுவதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். தர்மத்திற்கு மாறான தரம் கெட்ட போக்கை, ஸ்டாலின் தொடர்வாரானால் திமுக முகமற்று அழியும் என்பது நிச்சயம் என அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
Discussion about this post