பெரம்பலூரில் அரசு அளித்த கடனுதவியால் கற்றாழை ஜூஸ் விற்பனை மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்டுள்ளார் முன்னாள் சிறை கைதி ஒருவர். பிறருக்கு முன்னுதாரணமாக திகழும் அவரை பற்றி பார்ப்போம். தமிழகம் முழுவதும் கோடை வெயில் தொடங்குவதற்கு முன் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலிருந்து தப்பிக்க தர்பூசணி, பழச்சாறு, கரும்புசாறு, இளநீர், கற்றாழை சாறு போன்றவற்றின் மூலம் உடல் சூட்டை மக்கள் தணித்து கொள்கின்றனர். அந்த வரிசையில், பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது இயற்கையான முறையில் கற்றாழை சாறு விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் முன்னாள் ஆயுள் தண்டனை கைதி ஒருவர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 2003 ம் ஆண்டு தனது அம்மாவை துன்புறுத்தியவர்களை கொலை செய்த குற்றத்திற்காக 15 ஆண்டுகள் ஆயுள் தண்டனை கைதியாக சிறை வாழ்க்கை அனுபவித்தார். தண்டனைக்காலம் முடிந்து வெளியே வந்த மணிகண்டன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கடந்த ஒராண்டிற்கு முன் கற்றாழை கடை அமைத்தார். சிறை வாழ்க்கையை அனுபவித்து வறுமையில் வாடிய மணிகண்டனுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மகளிர் சுய உதவி குழு மூலம் கடன் உதவியும் வழங்கப்பட்டது. மலை பகுதிகளில் இருந்து காலை 5 மணிக்கு கற்றாழையை வெட்டி எடுத்து வந்து கற்றாழை ஜூஸ் விற்பனை செய்கிறார் மணி கண்டன்.
Discussion about this post