பெண்களுக்கான 8வது FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பெண்களுக்கான 8வது ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தொடங்குகிறது.

1991ம் ஆண்டு முதல் பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி நடைப்பெற்று வருகிறது. இப்போது 8வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, பாரிசில் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. சீனா, ஜப்பான், கொரிய குடியரசு, தாய்லாந்து ஆகியவை மட்டும் ஆசிய நாடுகள். இதில் ஜப்பான் 2011ல் உலக கோப்பையை வென்றுள்ளது. அமெரிக்கா 3 முறையும், ஜெர்மனி 2 முறையும், நார்வே ஒரு முறையும் உலக கோப்பையை வென்றுள்ளன. நடப்பு சாம்பியனான அமெரிக்கா, இந்த முறை எஃப்- பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த உலக கோப்பையின் லீக் போட்டிகள் இன்று முதல் ஜூன் 20ம் தேதி வரையிலும், நாக் அவுட் சுற்று ஜூன் 22ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரையிலும், காலிறுதிச் சுற்று ஜூன் 27, 28, 29 தேதிகளிலும் நடைபெறும். அரையிறுதி போட்டிகள் ஜூலை 2, 3 தேதிகளிலும், இறுதிப்போட்டி ஜூலை 7ம் தேதியும் நடைபெற உள்ளன. ஆண்கள் கால்பந்து போட்டியை போன்றே பெண்கள் கால்பந்து போட்டிக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 8வது பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் பிரான்ஸ், கொரிய குடியரசு அணிகள் இன்று மோதுகின்றன.

Exit mobile version