அனைத்து விதமான தாக்குதல்களில் இருந்தும் டெல்லியைப் பாதுகாக்கும் வகையில் 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
போர்க்காலங்களில் தலைநகர் டெல்லியானது எதிரி நாடுகளின் ஏவுகணைகளால் தாக்கக் கூடிய சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் எதிரி நாடுகளின் ஏவுகணைகள் மற்றும் எந்தவித பயங்கரவாத தாக்குதல்களில் இருந்தும் டெல்லியைப் பாதுகாக்க 5 அடுக்கு வளையத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதலடுக்கு டெல்லியின் புற நகரில் அமைக்கப்பட உள்ளது. பிரித்வி ஏவுகணைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முதலடுக்கில் அமையவுள்ளன. இரண்டாவது அடுக்கில், எதிரி நாடுகளின் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் எஸ் – 400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. ரஷிய தயாரிப்பான இந்த ஏவுகணைகள் 400 கிலோ மீட்டருக்கு அப்பால் வரும் எதிரிநாடுகளின் 100 இலக்குகளை கூட கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டது. மூன்றாவது அடுக்கில் இந்திய இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பான பாரக் ஏவுகணைகள் அமைக்கப்பட உள்ளன. விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கப்பல்களிலிருந்து இந்த ஏவுகணைகளை செலுத்த முடியும். நான்காவது வளையத்தில் உள்நாட்டுத் தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணைகள் அமைக்கப்பட உள்ளன. தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது ஆகாஷ். ஐந்தாவது வளையத்தில் அமெரிக்காவின் தயாரிப்பான நாசாம்ஸ் ரக ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் இடம் பெற உள்ளன.
Discussion about this post