இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதலாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. உலகக் கோப்பைப் போட்டி தோல்விக்குப்பின் ஹர்திக் பாண்டியா, பும்ரா, தோனி ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்து இளம் வீரர்களை அடையாளம் காணும் நோக்கில் இந்த போட்டியில் இந்திய அணி களமிறங்குகிறது. உலகக்கோப்பையில் பெற்ற தோல்வியிலிருந்து மீளும் விதமாகவும், வரும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்யும் களமாகவும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்த் தொடரை இந்திய அணி பார்க்கிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொருத்தவரை, சுனில் நரேன், கெய்ரன் பொலார்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் அணிக்குத் திரும்பியுள்ளனர். இருப்பினும் ஆன்ட்ரே ரஸல் முழங்கால் காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடமாட்டார் என்பது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதுவரை இந்திய அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் 11 முறை 20 ஓவர் கிரிக்கெட் ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் இருந்துள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
Discussion about this post