இலங்கையில் அதிபர் சிறிசேனா, ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் ஜனநாயக இயக்கத்தினர் 10 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிய அதிபர் சிறிசேனா, அந்த பதவிக்கு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். இதைத் தொடர்ந்து ராஜ்பக்சே பெரும்பான்மை நிரூபிக்க வேண்டியிருந்த சூழலில் நாடாளுமன்றத்தையும் முடக்க உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் இலங்கை அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதிபர் சிறிசேனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 20-ம் தேதி, மக்கள் ஜனநாயக சக்தி சார்பில் சத்தியாகிரக போராட்டம் தொடங்கியது. கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் தம்பல அமில தேரர் தலைமையில், இன்று 10-வது நாளாக நாடாளுமன்ற வளாகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதில், ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணிக் கட்சியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
Discussion about this post