அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் தங்களது தீர்ப்பினை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின்,பெரும்பான்மையை உறுதிசெய்திருக்கும் வாக்காளர்களுக்கு அவர்கள் நன்றி கூறியுள்ளனர். அதிமுகவின் வாக்கு வங்கி அசைக்க முடியாத எக்கு கோட்டை என்பதை நிலைநாட்டும் வகையில் பொதுமக்கள் வாக்களித்திருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் குறிப்பிட்டுள்ளனர். அகில இந்திய அளவில் பாஜக கூட்டணிக்கு கிடைத்திருக்கும் வெற்றி, பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் தமிழ்நாட்டை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உண்டு என்பதை இடத்தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டியிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மக்களவை,சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பிலும் மற்றும் கூட்டணிக்கட்சி சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக அரும்பணியாற்றிய கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் அனைவருக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.
Discussion about this post