தமிழர்களின் பெருமையாக விளங்கும் தஞ்சை பெரிய கோயில் பற்றியும், அது குறித்த கலை நுட்பங்களையும் குறித்து செய்தித் தொகுப்பில் காணலாம்…
சோழர்களின் பொற்காலம் என அழைக்கபடும் ராஜராஜசோழன் ஆட்சியில் கட்டபட்ட தஞ்சைப் பெரிய கோயில், ஏராளமான அற்புதங்களைத் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கிறது. நிலத்தின் தன்மையினை அறிந்து மிக நுட்பமாக அடித்தளத்தை அமைத்து, கோபுரத்தை வடிவமைத்து நிறுத்தியிருக்கிறார்கள் சோழச் சிற்பிகள். புவியின் நில அதிர்வை தாங்கும்வகையில் உருவாக்கப்பட்ட இக்கோயிலின் கட்டுமான நுட்பம் உலக வல்லுநர்களை எல்லாம் விழியுயர்த்தி வியக்கவைக்கிறது.
ஒவ்வொரு கல்லிலும் கலைநயம். ஒவ்வொரு சிற்பத்திலும் ஓராயிரம் கதைகள். வழிபாட்டுக்குரிய ஆலயமாக மட்டும் அல்லாமல், வங்கியாக, கலைக்கூடமாக, சமூக நிர்வாகத்துக்கான மையமாக விளங்கியிருக்கிறது இந்தப் பெரிய கோயில். இதை இராஜராஜேச்வரம் என்று குறிப்பிடுகின்றன இங்குள்ள கல்வெட்டுகள். கல்லணை நீர் தழுவிச்செல்லும் திருச்சுற்று மாளிகை, நெடிதுயர்ந்த திருவாயில்கள், வான் கயிலாயமாகவே விளங்கும் விமானம், இயற்கையின் அத்தனை அம்சங்களையும் அணுக்கமாகச் சுமந்துகொண்டிருக்கும் சிற்பங்கள். என பிரபஞ்சத் தத்துவத்தின் கட்டுமான மொழிபெயர்ப்பாக இருக்கிறது இந்தக் கோயில்.
காஞ்சிபுரத்தில் ராஜசிம்மப் பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில்தான் பெரிய கோயில் எழுவதற்கான ஆதாரம். அக்கோயிலின் அழகிலும் கலையிலும் மயங்கிப்போன ராஜராஜன், தன் தலைநகரில் அப்படியான ஒரு கலைக்கோயிலை எழுப்ப வேண்டும் என்று விரும்பினான். அதன் விளைவுதான் இப்பெரிய கோயில். தஞ்சை பெரிய கோயில் உருவாக்கத்துக்குப் பல்லாயிரம் பேர் துணை நின்றிருக்கிறார்கள். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொருவரின் உழைப்பு இருக்கிறது. பொருள் படைத்தோர் பொருள் தந்தார்கள். இல்லாதோர் கல் தந்தார்கள். எல்லோரின் பெயரும் கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கிறது.கோவிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட தங்க மற்றும் வெள்ளி பாத்திரங்களின் பட்டியலும் உள்ளது.
இராஜராஜ சோழனின் 19 ஆம் ஆட்சியாண்டில் கோவிலின் கட்டுமானப் பனி தொடங்கப்பட்டதும், அவருடைய 25 ஆம் ஆட்சியாண்டின் 275 ஆம் நாள் கோவிலின் குடமுழுக்கு நடத்தப்பட்டது என்னும் தகவல்களும் கல்வெட்டுகளில் உள்ளன. இந்த நாளில் பேரரசர் ஒரு செப்பு குடத்தை, இராஜராஜ சோழனின் விமானத்தின் மீது பொருத்துவதற்காக கொடுத்தார் என்கிறது கல்வெட்டு. இதன் மூலம் இது நடந்தது 1010 ஆம் ஆண்டு என்று கருதபடுகிறது
அண்மைக்கால வரலாற்றின் படி, ஆங்கிலேய ஆட்சியின்போது, கல்வெட்டு ஆய்வாளராக நியமிக்கப் பெற்ற ஜெர்மன் அறிஞர் ஹுல்ஸ் என்பவரே, 1886 ஆம் ஆண்டில், பெரியக் கோயில் கல்வெட்டுக்களைப் படியெடுத்துப் படித்து, இக்கோயிலைக் கட்டியவர் இராஜராஜ சோழன் என முரசறைந்து அறிவித்த பெருமைக்கு உரியவராவார்.
கருவறையைச் சுற்றி, நான்கு சுவர்கள். வெளியே சுற்றரை. அதன் வெளியே நான்கு சுவர்கள். இந்த எட்டு சுவர்களையும் இணைத்து, அதன் மேல் கூடையைக் கவிழ்த்து வைத்தாற்போல விமானம் அமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து 216 அடி உயரம் கொண்ட இந்தக் கோபுரம் 13 அடுக்குகள் உடையது. நான்கு பட்டை வடிவில், வெற்றிடமாகக் கூம்பிச் செல்லும் இதன் உச்சியில் 12 அடி உயரமுள்ள கலசம் பொருத்தப்பட்டுள்ளது…” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் பாலசுப்ரமணியன்
கோவிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், பூமியில் நில அதிர்வு ஏற்பட்டால் கோபுரமும் அசைந்து தன்னைத் தகவமைத்துக்கொள்ளும். அதனால்தான் எல்லா இயற்கைச் சீற்றங்களையும் தாக்குப்பிடித்து நிற்கிறது. பெரிய கோயில் இறைவனை `ஆடல்வல்லான்’ என்று சொல்வார்கள். தமிழகத்தில் எந்தப் பகுதியிலுமே இல்லாத தலையாட்டி பொம்மை தஞ்சாவூரில் மட்டும் எப்படிக் கிடைக்கிறது என்ற கேள்விக்குப் பதில், அந்தப் பொம்மையின் பெருவடிவம்தான் பெரியகோயில் என்பதுதான்…” என்கிறார் அவர்.
காலங்கள் மாறினாலும், மன்னன் வாழ்ந்த அரண்மனை, நகரம் இவை அழிந்து போனாலும், அவன் எழுப்பிய இந்த வானுயர பெருவுடையார் கோவில் காலம் காலத்துக்கும் நிலைத்து நின்று, தமிழரின் பெருமையினையும் மன்னன் ராஜராஜனின் புகழையும் உயர்த்திப் பிடிக்கும்…
Discussion about this post