தஞ்சை பெரிய கோயிலில், ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு விழா நடத்த இருப்பதாக தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்தார், அதில், 1997 ஆம் ஆண்டு, பிரகதீஸ்வரர் கோயிலில், சமஸ்கிருத மொழியில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டபோது தீ விபத்து ஏற்பட்டது என்றும், இதில் பலர் உயிரிழந்ததாகவும், கூறப்பட்டிருந்தது. அதன் பிறகு 2010ஆம் ஆண்டில் குடமுழுக்கு நடத்தப்படவில்லை எனவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். வருகிற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் தஞ்சை பெரிய கோவில் குடமுழக்கு விழாவை தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில், ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு விழா நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, ஜனவரி 27ம் தேதிக்கு, நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Discussion about this post