திருநெல்வேலியில் அமமுக கட்சியை சேர்ந்த தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் அ.ம.மு.க. கட்சி வளர்ச்சி பெற்று வருவதாகவும் வருகிற தேர்தல்களில் அ.தி.மு.க.- அ.ம.மு.க. இணையாமல் ஜெயிக்க முடியாது என பாரதிய ஜனதா கட்சி எண்ணி இந்த இரு கட்சிகளையும் இணைய வைக்க முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அமமுக , அதிமுகவையும், இரட்டை இலையையும் அழிக்க வரவில்லை என்றும் எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க.வும் இருக்க வேண்டும், இரட்டை இலையும் இருக்க வேண்டும் என்றும் தி.மு.க. தான் தங்களுக்கு முதல் எதிரி என்று குறிப்பிட்டார்.
தற்போது இருக்கக்கூடிய முதல்வரையும், சில அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் மாற்றி ஜெயலலிதா ஆட்சியை அமைத்தால் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய தயாராக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார் தங்க தமிழ்செல்வன்.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே தங்கதமிழ்செல்வன் தான் , அதிமுக என்பது மொட்டை கிணறு. மொட்டைக்கிணறு என தெரிந்தே அதில் விழுந்தால் இறந்து விடுவோம். அ.தி.மு.க.வில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் இன்று அவற்றையெல்லாம் மறந்து அதிமுகவில் இணைய தூது விடுகிறாரோ என்று அமமுகவினர் நினைக்கின்றனர். தினகரனும் தங்கதமிழ்செல்வனுக்கு முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை.
இதை உறுதிப்படுத்துவது போல் ஒரு சம்பவமும் சில மாதங்களுக்கு முன் நடந்தது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று நீதிமன்ற தீர்ப்பு வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார் தங்கதமிழ்செல்வன். அப்போதே அவர் விரக்கி அடைந்து காணப்பட்டார். தீர்ப்பு குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே , எவன் இந்த தீர்ப்பை மதிப்பான், பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச்செயலாளர் ஆகியோரை பார்த்து விட்டு மேல் முறையீடா, தேர்தலா அல்லது நாசாம போறதா என்று முடிவெடுப்போம் என்று கடும் விரக்தியோடு சொன்னார். அப்போதே அமமுகவில் தங்கதமிழ்செல்வனுக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டது.
அன்று அதிமுகவை மொட்டை கிணறு என்று விமர்சித்தவர், இன்று அமமுகவில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று நினைத்து எப்படியாவது தினகரனின் அமமுகவை விட்டு வெளியில் வர வேண்டும் என்று நினைத்து வார்த்தைகளை மாறி மாறி பேசி வருவதாக அமமுக தொண்டர்கள் முகம் சுளிக்கின்றனர்.இவர் பேச்சை நம்பியா அமமுகவில் சேர்ந்தோம் என்று அமமுக தொண்டர்கள் குமுறுகின்றனர்.
அன்று அ.தி.மு.க.வில் யாருக்கும் தலைமை பண்பு கிடையாது என்று சொன்னார் தங்கதமிழ்செல்வன் . ஆனால் இன்றோ அதிமுக குறித்து புகழ் பாடுகிறார். இதிலிருந்து, தினகரனின் பேச்சை நம்பி அவசரப்பட்டுவிட்டோமோ என்று தங்கதமிழ்செல்வன் நினைப்பதாகவே தெரிகிறது.
Discussion about this post