தைப்பூசத் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விடியா அரசு செய்து தரவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. தைப்பூசம் திருவிழாவையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம் தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அதிகாலை 7 மணிக்கு அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகிறது. தைப் பூசத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, முருக பக்தர்கள் காவடி சுமந்தும், அலகுவேல் குத்தியும் பாத யாத்திரையாக வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அதிகாலை முதலே பக்தர்கள், கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கடற்கரை மற்றும் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி, திருவிழா போல் காட்சியளிக்கிறது.