மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரஹானே 81 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் அதிகப்பட்சமாக இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகள் எடுத்தார். 75 ரன்கள் முன்னிலையுடன் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் விராட் கோலி 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து ரஹானேவுடன், ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார்.
இருவரும் மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்கள் சேகரித்ததுடன், முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். அபாரமாக ஆடிய ரஹானே தனது 10-வது சதத்தை எட்டினார். 7 ரன்னில் முதல் சதத்தை நழுவ விட்ட விஹாரி 93 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்ததை அடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 419 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
419 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் பிராத் வெயிட் 1 ரன்னும், ஜான் சேப்பல் 7 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய புரூக்ஸ் 2 ரன்னும், ஹெட்மயர் 1 ரன்னும், டேரன் பிராவோ 2 ரன்னும், ஷாய் ஹோப் 2 ரன்னும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 8 ரன்னும் எடுத்து மளமள வென தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்திய பவுலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்தவேகத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் வெளியேறினர். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 26.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமர் ரோச் 38 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அபாராமாக பந்து வீசிய பும்ரா 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், முகமது சமி 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதன்படி இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
Discussion about this post