அரசுப் பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்காக 3 தொலைக்காட்சி சேனல்கள் தயாராக உள்ளதென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 4 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 12ம் வகுப்பு தேர்வை பொறுத்தவரையில் விருப்பம் தெரிவிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாலம் என்றும், தற்போது 718 மாணவர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்வை எழுத முடியாத அனைத்து மாணவர்களும் தேர்வெழுதுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் கல்வியாண்டில் கற்றல், கற்பித்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட 18 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். இதில் வரும் கல்வியாண்டில் கற்றல், கற்பித்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கூட்டத்தில் வரும் கல்வியாண்டில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், இறுதிக்கட்ட அறிக்கை தயார் செய்து விரைவில் முதலமைச்சரிடம் அளிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post