கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஆட்சியில் தொலைபேசி பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அம்மாநில முதலமைச்சர் எடியுரப்பா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் பல நாட்களாக தொடர்ந்த அரசியல் பரபரப்பு முடிந்து, மீண்டும் பா.ஜ.க, ஆட்சி அமைந்த நிலையில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் பதவிக்குப் பலர் போட்டியிட்ட நிலையில், பாஸ்கர ராவ் என்பவர் எடியூரப்பாவால் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பாஸ்கர ராவ் இடைத்தரகர் ஒருவரிடம் பேசி தனக்கு ஆணையர் பதவியை பெற்றுத் தருவதற்கு பேரம் பேசிய, தொலைபேசி உரையாடல் ஒளிபரப்பப்பட்டது. இதனையடுத்து விசாரணை நடத்திய போது, அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்களின் தொலைபேசி உரையாடல்கள் கடந்த சில மாதங்களாக ஒட்டுக் கேட்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது பற்றித் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, என முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி ஒட்டுக் கேட்பு சம்பவங்கள் குறித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்கும்படி தலைமைச் செயலாளரிடம் கேட்டுக் கொண்ட முதல்வர் எடியூரப்பா இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post