“தேஜஸ்” ரயில் தாமதமாக வருகை தந்ததால் பயணிகளுக்கு இழப்பீடு அறிவிப்பு

இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கும், உத்திரப் பிரதேசத்தின் லக்னோ நகருக்கும் இடையே தேஜஸ் ரயில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் முழுதும் தனியார்மயமாக்கப்பட்ட முதல் ரயில் இது ஆகும். அந்த ரயில் தனியார்மயமாக்கப்பட்ட போதே, ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என  ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று கான்பூரில் ஒரு ரயில் தடம் புரண்டதால், லக்னோவில் இருந்து காலை 6.10க்கு புறப்படவேண்டிய தேஜஸ் ரயில், 3 மணி நேரம் தாமதமாக 9.55க்குத்தான் கிளம்பியது. இந்த தாமதம் காரணமாக அந்த ரயிலில் பயணித்த 450 பயணிகளுக்கும் தலா 250 ரூபாய் இழப்பீடாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தாமதமாக கிளம்பியதால், டெல்லிக்கு தாமதமாக சென்ற தேஜஸ் ரயில் பின்னர் லக்னோவுக்குத் திரும்புவதிலும் 1 மணிநேர தாமதம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பயணத்தில் பங்கேற்ற 500 பயணிகளுக்கும் தலா 100 ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது!. இப்படியாக அறிவிக்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகையின் மதிப்பு ரூ.1.62 லட்சம் ஆகும். 

பல ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் ரயில் தாமதத்திற்கு இழப்பீடு வழங்கும் முறை உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ரயில் தாமதமானால் இழப்பீடு வழங்கப்படுவதோடு, பயணக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படுவது உண்டு. ஆனால் இந்தியாவில் அந்த வழக்கம் இல்லை!. தேஜஸ் ரயில் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்ட இந்த இழப்பீடே, இந்தியாவில் ரயில் பயணிகள் தாமதத்திற்காகப் பெறும் முதல் இழப்பீடு ஆகும். 

பெரிதும் நவீனமயமாக்கப்பட்ட இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு விபத்து மற்றும் கொள்ளை ஆகியவற்றின் போது இலவச காப்பீடு உண்டு என்பது கூடுதல் செய்தி.

Exit mobile version