மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 168 ரன்களில் இந்தியா டிக்ளேர் செய்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற 468 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கிங்ஸ்டனில் தொடங்கிய 2-வது போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 416 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய அந்த அணி 30 ரன்களுக்குள் மேற்கொண்டு 3 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 6 ரன்னிலும் மயங்க் அகர்வால் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடந்து களம் இறங்கிய கேப்டன் கோலி டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். பின் புஜாராவும் 27 ரன்னில் ஆட்டமிழக்க 57 ரன்களுக்கு இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
பொறுப்புடன் ஆடிய ரஹானே, விஹாரி 5 விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தனர். ரஹானே 64 ரன்னும் விஹாரி 53 ரன்களும் எடுத்திருந்திருந்த போது இந்தியா 168 ரன்களில் டிக்ளேர் செய்தது.
இதனால் மேற்கிந்தியதீவுகள் அணிக்கு 468 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 16 ரன்னில் கேம்பெல் விக்கெட்டையும், 3 ரன்னில் பிராத்வெயிட் விக்கெட்டையும் இழந்தது. இதனால் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்திருந்த போது 3 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது, அப்போது டேரன் பிராவோ 18 ரன்னிலும், ப்ரோக்ஸ் 4 ரன்னிலும் இருந்தனர். இதனால் இந்தியா 423 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.