ஜோதிகா நடித்துள்ள ‘ராட்சசி’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஒய். கௌதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்து கடந்த 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ராட்சசி’ . அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையாக ஜோதிகா நடித்துள்ள இந்த திரைபடத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்தில், பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் கேட்பது, ஆசிரியைகள் பள்ளி வகுப்பு நேரங்களில் ஸ்டாப் ரூமில் உக்கார்ந்துகொண்டு மேக்கப் போடுவது, சில ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு சொந்த வேலைக்கு செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல், இப்படத்தில் உடற்கல்வி ஆசியராக நடித்துள்ள சத்யனின் கதாபாத்திரம், உடற்கல்வி ஆசிரியருக்கான எந்த தகுதியும் இல்லாமல், எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளை அவர்கள் தனியார் பள்ளியில் படிக்க வைப்பதாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பாதி கேட் மட்டுமே இருக்கும் பள்ளிக்கூடம், ஜன்னல் வழியே குதித்து வெளியே செல்லும் மாணவர்கள், அருகில் உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளினால், அரசுப்பள்ளி மாணவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று சொல்வதுபோல் சித்தரிக்கபட்டுள்ளது.
தலைமை ஆசிரியையாக வரும் ஜோதிகா, பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வு வைக்கும் காட்சியில், கணக்கு மற்றும் ஆங்கில பாடங்களில் ஆசியர்கள் தடுமாறுவதுபோல் சித்தரித்துள்ளனர்.
இதனால், இத்திரைப்படத்தில் வரும் காட்சிகளைப் பார்க்கும் பெற்றோருக்கு, அரசுப்பள்ளி மீதும், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதும் நம்பிக்கை குறையும் நிலை உருவாகும் என்றும், அதை தடுக்க அரசுப்பள்ளிகள் மீது இது போன்ற தவறான பிம்பத்தை உருவாக்கும் திரைப்படங்களை தடை செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post