அழிவின் விளிம்பில் உள்ள நாட்டுப்புறக் கலைகளைப் பரப்புவதில் ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், நாட்டுப்புறக் கலையுடன் கல்வியையும் இணைத்து மாணவர்களின் திறமைக்கு அரிதாரம் பூசுகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள காத்தனேந்தல் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் காத்தனேந்தல், குமிலாங்குளம், பறையான்குளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தப்பள்ளிக்கு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இடை நிலை ஆசிரியராக விஜயராம் என்பவர் பணியில் சேர்ந்துள்ளார். அப்போது, பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களை கண்டால் ஏதோ ஒரு பயத்துடனே பேசி பழகி வந்ததை உணர்ந்த அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
சிறுவயது முதலே தான் கற்றுத்தேர்ந்த பாரம்பரிய கலைகளை மாணவர்களுக்கும் கற்றுக்கொடுப்பதன் மூலம், அவர்களின் அச்ச உணர்வுகளைக் களைவதுடன், அழிவின் விளிம்பில் உள்ள நாட்டுப்புறக் கலைகளையும் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லவும் முடிவு செய்தார்.
முதற்கட்டமாக நாட்டுப்புற கலைக்களுக்கு தேவையான சாதனங்களை தனது சொந்த செலவில் வாங்கிய விஜயராம், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நாட்டுபுறப் பாடல், கும்மியாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, அவர்களுடன் ஆடிப், பாடி பழக ஆரம்பித்தார்.
சக மாணவர்களுடன் ஆசிரியர் விஜயராம் ஆடிப் பாடி சகஜமாக பழகியதால், மாணவர்கள் எளிதில் பாடத்தை புரிந்து கொள்வதுடன், ஆசிரியர்களிடம் எந்தவொரு தயக்கமும் இன்றி, பாடத்தில் உள்ள சந்தேகங்களை கேட்டு புரிந்து கொள்வதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
நாட்டுப்புறக் கலைகள் மூலமாக பாடம் நடத்தும் ஆசிரியரின் செயல்பாட்டால் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்களிலும் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வரவே விரும்புகின்றனர்.
தனியார் பள்ளிகளில் அதிகளவில் பணம் செலவு செய்து தங்களது குழந்தைகளை படித்து வைத்து வந்த காத்தனேந்தல் கிராம மக்கள், தற்போது, தனியார் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதை தவிர்த்து அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நாட்டுபுறக் கலைகள் மூலம் பாடம் கற்பித்து அரசுப்பள்ளிக்கு பெருமை சேர்த்து வரும் இடைநிலை ஆசிரியர் விஜயராமுக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post