29 அமெரிக்க பொருட்கள் மீதான வரிவிதிப்பு நாளை முதல் அமல் – மத்திய அரசு

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வால்நட் உள்ளிட்ட 29 பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரிவிதிப்பு தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கிடையில் மோதல் ஏற்பட்டு இரு நாடுகளும் ஒன்றன் பொருட்கள்மீது மற்றொரு நாடு வரிகளை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் வரியை முறையே 25 மற்றும் 10 சதவிகிதம் அதிகரித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா அறிவித்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வால்நட், பருப்பு வகைகள், இரும்பு, உருக்குப் பொருள்கள் மீதான சுங்க வரியை அதிகரிக்க இந்தியா கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்தது. இது ஆகஸ்டு மாதம் 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, இருநாட்டு அதிகாரிகள் இடையே தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கான வரி, நாளை முதல் அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசுக்கு ஆயிரத்து 514 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். இதுதொடர்பான முறையான அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் விரைவில் வெளியிட உள்ளது.

Exit mobile version