முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெறுகிறது.
எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான், எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்புகளுக்கான டான்செட் பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என அண்ணா பல்கலை அறிவித்தது. அதனடிப்படையில் இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 8ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. எம்.பி.ஏ படிப்பிற்கு 21 ஆயிரத்து 340 பேரும், எம்.சி.ஏ.விற்கு 5 ஆயிரத்து 922 பேரும், எம்.இ,எம்.டெக் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்பிற்கு 13 ஆயிரத்து 880 பேரும் என மொத்தம் 41 ஆயிரத்து 142 பேர் டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்தநிலையில் டான்செட் நுழைவுத்தேர்வு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. எம்.சி.ஏ. படிப்பிற்கு இன்று காலை 10 முதல் 12 மணி வரையிலும், எம்.பி.ஏ. படிப்புக்கு இன்று பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரையிலும் தேர்வு நடக்கிறது. நாளை எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையிலும் தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.