எண்ணூரில் TANGEDCO சட்டத்தை பின்பற்றிச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மூன்று பேர் அடங்கிய குடிமக்கள் குழு முதலமைச்சருக்கும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், தலைமை செயலாளருக்கும் எழுதியுள்ளனர்.
‘TANGEDCO எந்த பொறுப்பும் இன்றி சட்டத்தை மீறி செயல்படுவதால் ஏற்படும் இழப்புகளைச் சரி செய்ய மக்கள் பணத்தைச் செலவு செய்ய வேண்டிவரும்’ என்று குடிமக்கள் குழுவைச் சேர்ந்த பேரா. ஜனகராஜன், பாடகரும் செயல்பாட்டாளருமான T M கிருஷ்ணா, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த G. சுந்தர்ராஜன் ஆகியோர் எச்சரித்தனர்.
“நாங்கள் மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களிடம் முறையிடுகிறோம். ஏனென்றால், சட்டத்தைவிட உயர்ந்த இடத்தில் தான் இருப்பதாக நினைத்துக்கொண்டு TANGEDCO செயல்படுகிறது. TANGEDCO எண்ணூர் கழிவெளியை மாசுபடுத்தியுள்ளதால், கையால் இறால் பிடித்து வாழும் பெண்கள் உட்பட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார இழப்புகளுக்கும், ஆரோக்கிய இழப்புக்கும் ஈடு செய்தாக வேண்டும்”, என்று குழுவினர் விளக்கம் அளித்தனர்.
நிலக்கரி கொட்டி வைக்கும் இடங்கள், பெட்ரோலிய முனையம், அனல்மின்நிலையம், அனல் மின் நிலையத்தின் பிற தேவைகளுக்கான இடங்கள், சாம்பல் குளம் என்று எண்ணூர் சதுப்புநிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், 1500 ஏக்கருக்கும் மேலான கொற்றலையாற்றின் நீர்ப்பரப்பு ஏற்கனவே இழக்கப்பட்டுவிட்டது. கொற்றலையாற்றின் 1000 ஏக்கருக்கு மேலான பரப்பு நிலக்கரி சாம்பலால் நிறைந்துள்ளது.
காட்டுக்குப்பம் மீனவர்களும் எண்ணூர் கழிவெளி பாதுகாப்பு பிரச்சாரமும் அளித்த அழைப்பை ஏற்றுக்கொண்டு இக்குழுவினர் 12.07.2021 அன்று எண்ணூருக்குச் சென்ற குழுவினர் பின்வரும் செய்திகளை கண்டுபிடித்தனர்
a) சட்டத்தின்படி செய்ய வேண்டிய தன் வேலைகளை TANGEDCO தன் மனம் போன போக்கில் செய்துள்ளது. சட்டத்திற்கு விரோதமாகவும், வேலைக்கான உரிமத்தில் சொல்லப்பட்ட நிபந்தனைகளை மீறியும், பல்வேறு நீதிமன்ற வழக்குத் தீர்ப்புகளுக்கு விரோதமாகவும் TANGEDCO செயல்பட்டுள்ளது.
b) சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006, கடற்கரை ஒழுங்கமைவு மண்டல அறிவிக்கை 2011, காற்று சட்டம் 1981, நீர் சட்டம் 1976, அரசாணை Ms No. 213 (1989), மற்றும் பல நீதிமன்ற உத்தரவுகளுடன் மோதுவதாக NCTPSயின் சாம்பல் சகதி குழாய் அமைந்துள்ளது. இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறப்படவில்லை. கடற்கரை ஒழுங்கமைவு ஒப்புதல் பெறப்பட்டிருக்கவில்லை. கட்டுமானத்தை மேற்கொள்வதற்கான ஒப்புதலைக் காற்று மற்றும் நீர் சட்டங்களின்படி பெறவில்லை.
c) எண்ணூர் SEZக்கான நிலக்கரி- கடல்நீர் இடைவழி கன்வேயர் அமைப்பதற்கான வேலை அதற்காக அளிக்கப்பட்ட திட்ட வரைபடத்தை மீறியதாக உள்ளது; ஆற்றின் வழியாகவும், நீர்நிலைகளின் வழியாகவும் பயணப்படுவதாக, மிக முக்கியமான மீன்களின் வாழிடத்தையும் அலையாத்திகளையும் ஆக்கிரமிப்பதாக உள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006, கடற்கரை ஒழுங்கமைவு மண்டல அறிவிக்கை 2011, காற்று சட்டம் 1981, நீர் சட்டம் 1976, அரசாணை Ms No. 213 (1989) ஆகியவற்றின் ஒப்புதலைப் பெறாததாகவும், பல நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானதாகவும் இத்திட்டம் உள்ளது.
d) மீனவர்களும், பெண் மீனவர்களும் பயன்படுத்துகின்ற வாழ்வாதார புறம்போக்குகளை TANGEDCO வின் செயல்பாடுகள் சேதப்படுத்தியுள்ளன. இந்த தீய செயலினால், மீனவ சமூகமும், வாழ்வாதாரத்துக்கான கழிவெளியை நம்பியுள்ள மக்களும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.
e) இந்த பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தொழில்மயமாக்கத்தினால் மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். தொழிலகங்களால் பாதுகாப்பான வேலை கூட உள்ளூர் மக்களுக்கு அளிக்கப்படவில்லை.
f ) கடற்கரையை சுத்தம் செய்தல், தண்டனை தொகை கட்டுதல், சட்ட மீறலுக்காகவும், உயிர்ச்சூழலை சேதப்படுத்தியதற்காகவும் அபராதம் கட்டுதல், வாழ்வாதார இழப்பை ஈடுகட்டவும், மக்களின் ஆரோக்கியத்தைப் பாதித்ததற்காகவும், குற்ற செயலுக்காகவும் இழப்பீடு தருதல் என்ற வகைகளில் ஏற்படும் செலவினங்களை அளிக்க வேண்டிய நிலையில் TANGEDCO உள்ளது. TANGEDCOவின் தற்போதைய நிதிநிலையை கணக்கில் கொண்டு பார்க்கும்போது, கணிசமான நிதிச்சுமை வரிக்கட்டும் பொதுமக்கள் தலையில் விழும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும் அரசு?
அரசு இப்பிரச்சனையில் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும். இப்பிரச்சனைக்கான தீர்வை வழங்க வேண்டும். அரசை பின்வருமாறு வேண்டுகிறோம் :
1. எண்ணூர் CRZ கன்வேயர் கட்டுமானத்துக்கான அனைத்து வேலைகளையும் TANGEDCO நிறுத்தி வைப்பதை உறுதி செய்ய வேண்டும். கொட்டப்பட்டுள்ள அனைத்தையும் அகற்ற வேண்டும். நதியை அதன் பழைய நிலைக்கு மீட்டுக்கொண்டுவர வேண்டும்.
2. பக்கிங்காம் கால்வாயிலும், ஆற்றிலும், கழிவெளியிலும், வெள்ளப்பரப்பு பகுதிகளிலும், கைவிடப்பட்ட உப்பளங்களிலும் கொட்டப்பட்டுள்ள நிலக்கரி சாம்பல் முழுமையையும் அறிவியல் பூர்வமான முறையில் அள்ளுவதற்கான செலவை TANGEDCO அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
3. கையால் இறால், நண்டு பிடிக்கும் இருளர் மற்றும் தலித் பெண்கள் உட்பட அனைத்து பெண்- ஆண் மீனவர்களுக்கும் எண்ணூர் கழிவெளி மாசுபட்டதால் ஏற்பட்ட வாழ்வாதார இழப்புக்காக இழப்பீடு வழங்க வேண்டும்.
4. NCTPSகளால் ஏற்பட்ட ஆரோக்கிய இழப்புக்காகவும், காற்று மாசுபாட்டால் வாழ்க்கையின் தரம் சீரழிந்தமைக்காகவும், அவை சார்ந்த பாதிப்புகளாக்கவும் உள்ளூர் மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
5. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்.
6. சேப்பாக்கம் சாம்பல் குளத்தின் அருகே வாழும் குடிசைப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பான இடத்தில் மாற்றிடம் வழங்க வேண்டும். இடைக்காலத்தில் அவர்களுக்கு போதுமான அளவுக்கு பாதுகாப்பான நீர் வழங்க வேண்டும்.
7. கசிவைத் தடுக்கும் வகையில், அடிப்பகுதியில் பூச்சு வேலை செய்யப்படாத சேப்பாக்கம் சாம்பல் குள வேலைகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க வேண்டும். 100 சதம் அளவுக்கு உலர்ந்த சாம்பலை சேகரிக்கும் முறைக்கு மாறிச் செல்ல வேண்டும்.
8. நிலக்கரி சாம்பல் வெளியேற்றத்தை நிறுத்த வேண்டும் என்றும், ஆற்றுப் படுகையிலிருந்து மாசுபாடுகளை அகற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றமும் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் அளித்த உத்தரவுகளை நிறைவேற்றாமல், நீதிமன்றங்களை அவமதித்தமைக்குப் பொறுப்பான TANGEDCO அதிகாரிகள் மீது தண்டனை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை அரசு நிறைவேற்ற வேண்டும்.
9. சுற்றுச்சூழல் ஒப்புதல்/ கடற்கரை ஒழுங்கமைவு மண்டல ஒப்புதல் பெறுவதற்கான தவறான தகவல்களை சத்தியப்பிரமானமாக அளித்த TANGEDCO அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.