சினிமா போல், நிஜத்திலும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு, தொழிலதிபரின் சொத்துக்களை சுரண்டிய போலீசார், சிபிசிஐடி பிடியில் சிக்கியுள்ளனர். லோக்கல் தாதாக்களோடு கூட்டணி வைத்த காக்கி தாதாக்கள் சிக்கிக் கொண்ட கதைதான் இது.
சென்னை அயப்பக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். BPO நிறுவனம் நடத்தி வந்த இவர், 2019ம் ஆண்டு தேனாம்பேடையைச் சேர்ந்த வெங்கடேசனுடன் தொழில் செய்துள்ளார். இருவருக்குள்ளும் பணப் பிரச்னை எழுந்த நிலையில், வெங்கடேசன் கடன் தொகையான 5 கோடியே 50 லட்சம் ரூபாயை ராஜேஷுக்கு கொடுத்து செட்டில் செய்து விட்டார்.
இந்நிலையில், வெங்கடேஷன் தனது தொழிலை மேம்படுத்த ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த சிவாராவ், சீனிவாசராவ் ஆகியோரிடம் கடனாக வாங்கிய15 கோடி ரூபாயை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கிய நிலையில், அவர் ராஜேஷை கை காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ராஜேஷிடம் பணம் பெற்றுத் தரும் பொறுப்பை கட்டப்பஞ்சாயத்து நபரான ஸ்ரீகண்டன் என்கிற கோடம்பாக்கம் ஸ்ரீயிடம் ஆந்திர நபர்கள் ஒப்படைத்துள்ளனர். அவரோ, தனக்கு வேண்டப்பட்ட திருமங்கலம் காவல்நிலைய உதவி ஆணையரிடம் விவகாரத்தைக் கொண்டு செல்ல, சினிமா தாதா பாணியில், உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் ஆகியோர் ராஜேஷை திருமங்கலம் காவல்நிலையத்துக்கு வரச்சொல்லி, அடித்து உதைத்து, மிரட்டியதையடுத்து, அயனம்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான சொத்தை சிவாராவ் பெயரில் அவர் எழுதிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் ராஜேஷை குடும்பத்தினரோடு கடத்திய இந்த கும்பல், சென்னை செங்குன்றத்தில் உள்ள திமுக பிரமுகரான மணிமாறன் என்பவரது பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து, சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்கியுள்ளனர்.
இது தொடர்பாக ராஜேஷ் மீண்டும் அளித்த புகாரில், சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு, உதவி ஆணையர் சிவகுமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் ஜோசப், கிரி, ஜெயகுமார் உள்ளிட்ட 10 பேர் மீது, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சினிமா போல், ரவுடிகளுக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு, வழக்கில் சிக்கியுள்ள காவல்துறையினர் மீது எடுக்கப்படும் நேர்மையான நடவடிக்கையே, காவல்துறையின் மீதுள்ள களங்கத்தை துடைக்கும்.
செய்தியை காட்சிப்பதிவுடன் காண கீழே உள்நுழையுங்கள்…
??⏬⏬⏬⬇⬇⬇⏬⏬⏬??⬇⬇⬇⏬⏬⏬??⬇⬇⬇
Discussion about this post