புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ 9 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் உதவி கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையத்தின் எண்கள் துவங்கப்பட்டு உள்ளதாக தொழிலாளர் நலத்துறை ஆணையர் வள்ளலார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும், பதட்டமும் அடையாமல் தங்கள் பணியிடங்களில் தொடர்ந்து பணிபுரியுமாறு தமிழக தொழிலாளர் நலத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கரோனா வைரஸ் தொற்றுநோய் இரண்டாவது அலை பரவிவருவதை தொடர்ந்து வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்வதை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டு, அதுதொடர்பாக புகார்களை இந்த மையத்தின் மூலம் பெறும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிமாநில தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் பொழுது இந்த 9 மாவட்டங்கள் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு அவருக்கு தேவையான தகுந்த நிவாரணத்தைப் பெறவும், ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் இந்த கட்டுப்பாட்டு அறை அலுவலர்களால் தரப்படும் என்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் வள்ளலார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version