கேரளாவில் ஏற்பட்டுள்ள பறவைக்காய்ச்சல் எதிரொலியால், புளியரை சோதனை சாவடி வழியாக தமிழகம் வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமினி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்திற்கு இந்த நோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில், கால்நடை துறை அதிகாரிகள் பறவைக்காய்ச்சல் தடுப்பு முகாம் அமைத்துள்ளனர். அங்கு, கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கோழி, வாத்து, முட்டை மற்றும் கோழி தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்படுகின்றன.