ஐந்தாண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண் விவரங்களை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பி.ஏ. எல்.எல்.பி., பி.காம் எல்.எல்.பி., பி.பி.ஏ. எல்.எல்.பி., பி.சி.ஏ. எல்.எல்.பி. ஆகிய படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான கட் ஆப் மதிப்பெண் விவரங்களை, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மாணவர்களின் சாதிவாரியான இட ஒதுக்கீடு அடிப்படையில் கட்-ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது என்றும், மாணவர்கள் தங்கள் கட்-ஆப் மதிப்பெண் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்காத காரணத்தினால் அவர்களுக்கான 15% ஒதுக்கீட்டு இடங்களும் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மாணவர்கள் கொடுத்துள்ள சான்றிதழ்கள் அடிப்படையில் அவர்களுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் கொடுத்துள்ள சான்றிதழ்கள் தகுதி வாய்ந்தது அல்ல என்றால் அவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்ப படாது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக அரசாணைப்படி 4% இடங்கள் தொழிற்கல்வியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.