திமுக தலைவர் கருணாநிதியின் அனுமதியின் பேரிலேயே காவிரியின் குறுக்கே கர்நாடகா நான்கு அணைகளை கட்டியதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமி மற்றும் ஒசூர் சட்டமன்ற வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த அவர் காவிரிப் பிரச்சனையில் நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதற்கும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கும் அதிமுக அரசே காரணம் என்பதை சுட்டிக் காட்டினார்.
அதிமுக அரசின் சீரிய முயற்சியால் கடந்த நான்கு ஆண்டுகளாக நெல் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில் வளமும், வேலை வாய்ப்பும் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், 2023 ஆம் ஆண்டிற்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாறும் என்று உறுதி அளித்தார்.
அதிமுகவில் சாதாரண தொண்டரும் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் வர முடியும். ஆனால் திமுக, காங்கிரசில் அதற்கு வாய்ப்பில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் ஆதரவு திரட்டிய அவர், அதிமுக காணமால் போகும் என்று ஸ்டாலின் குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளதாக குறிப்பிட்டார்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த 2000 ரூபாய் கட்டாயமாக வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.பி முனுசாமியை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
Discussion about this post