இந்திய அளவில் சாலை விபத்துகளை குறைத்ததில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாகவும், இதற்காக மத்திய அரசின் விருதை தமிழகம் பெறவுள்ளதாகவும், கரூரில், போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூரில் 4 கோடி ரூபாய் மதிப்பில், 15 நகர பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், சாலை விபத்துக்களை குறைத்ததில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், இதற்காக 13ம் தேதி டெல்லி சென்று, மத்திய அரசு வழங்கவுள்ள விருதினை தமிழகம் பெறவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழகத்தில் குறைவான கட்டணத்தில் நிறைவான சேவையை போக்குவரத்துத் துறை செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, கரூர் மாவட்டம் கரைப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திடீரென அரசு பேருந்துகளை ஆய்வு செய்தார். கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு குளிர்சாதன விரைவு பேருந்தை நிறுத்தி ஆய்வு செய்த அமைச்சர், பேருந்துகளில் உள்ள வசதி குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தார். அப்போது. குறைந்த தூரத்திற்கு பயணம் செய்ய, குளிர்சாதன பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாக தெரிவித்த பயணிகள், போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.