கொரோனா தொற்று தினசரி பாதிப்பில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தை பிடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 4 நாட்களாக புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்துக்கு கீழ் குறையவில்லை.
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை விட சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 2 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திங்களன்று தொற்று பாதித்து 311 பேர் உயிரிழந்த நிலையில், அது நேற்று 364 ஆக உயர்ந்தது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 369 ஆக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் சென்னை மண்டலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 10 ஆயிரத்து 966 பேர் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக மேற்கு மண்டலத்தில் 8 ஆயிரத்து 479 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சையில் உள்ளனர். தென் தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் வட தமிழகத்தில் 3 ஆயிரத்து 442 பேரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய மண்டலத்தில் 4 ஆயிரத்து 169 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியும் மந்தமாகவே நடைபெறுகிறது. நேற்று முன் தினம் 63 ஆயிரத்து 101 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் நேற்று 50 ஆயிரத்து 91 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Discussion about this post