தமிழ்நாட்டில் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தடுப்பூசிக்கு தட்டுபாடு இருக்கும் நிலையில், இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு எவ்வாறு செயல்படுத்தப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க, கோவிஷீல்ட், கோவேக்சின் என இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
45 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
ஆனால், போதிய கொரோனா தடுப்பூசி இல்லாததால், பல இடங்களில் இன்னும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவனை தடுப்பூசியே போட முடியாத நிலையே இருக்கிறது.
கொரோனா தொற்று அதிகம் உள்ள கோவை போன்ற மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பூசி இல்லை என்று மருத்துவமனையின் முன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளன.
எனவே, முதல் தவணை தடுப்பூசி செலுத்த வருபவர்கள், இரண்டாம் தவனைக்காக காத்திருப்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் 18 வயது 44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் முதல் கட்டமாக 15 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி, இந்த திட்டத்தை தமிழக அரசு தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 63 லட்சம் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி செலுத்த முடியாத நிலையே நீடிக்கிறது.
இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு ஏற்றார் போல, இணையத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்பதிவு செய்யவும் இயலவில்லை என்று புகார் கூறப்படுகிறது.
Discussion about this post