குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம், நாளை கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்து சிறப்பு பயிற்சி மையங்களில் அவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுவதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். அவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அனைத்தும் விலையின்றி இலவசமாக வழங்கப்படுவதுடன், மாதந்தோறும் 500 ரூபாய் வீதம், உதவித் தொகை வழங்கப்படுவதையும் முதலமைச்சர் எடுத்துரைத்தார். தமிழக அரசின் சீரிய முயற்சியால், குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாகவும் குறிப்பிட்டார். குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம் என்பதை உணர்ந்து, அரசு மேற்கொள்ளும் சீரிய முயற்சி திட்டங்களுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Discussion about this post